Friday, June 26, 2009

பதுங்கு குழியில் பிறந்த குழந்தை - கவிஞர் நவம் வழங்கிய உரை


சுடருள் இருள் நிகழ்வில் தீபச்செல்வனின் “பதுங்கு குழியில் பிறந்த குழந்தை” நூலை முன்வைத்து கவிஞர் நவம் வாசித்த உரையின் ஒலித் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

நவம் அவர்கள் இவர் கவிஞரும் திறனாய்வாளருமாவார். இவரது உள்ளும் புறமும் - இலங்கையில் விருது பெற்ற சிறுகதைத் தொகுப்பாகும். மேலும் கடந்த காலத்தில் வெளிவந்த நான்காம் பரிணாமம் சஞ்சிகையின் ஆசிரியருமாவார்.

கீழ் வரும் ஒலிப் பதிவை முழுமையாகக் கேட்க, “Play full Song" என்ற சுட்டியை அழுத்தவும்



Navam on Theepachelvan - Navam

Wednesday, June 24, 2009

கனவின் சொற்களால் விளைந்த துயரம் - தீபச்செல்வன்

ந‌ன்றி: கீற்று

(கடந்த 13.06.2009 அன்று கனடாவில் ‘சுடருள் இருள்’ இலக்கிய நிகழ்வு நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ சில பகிர்தல்களில் க.நவம், தர்ஷன் முதலியோர் விமர்சனங்களை நிகழ்த்தியிருந்தனர். இறுதியாக இந்த உரை வாசிக்கப்பட்டது. உரையை சுதன் வாசித்திருந்தார்.)

அன்பிற்குரிய நண்பர்களுக்கு வணக்கம்,

நீங்கள் இப்படியொரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதன் பின்பிருக்கிற கையறுநிலையை என்னால் மிகவும் உணர முடிகிறது. இந்த கவிதைகள் பற்றிய விவாதமும் விமர்சனமும் உங்களுக்குரியவை. அவை தொடர்பான உங்கள் கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன். வடிவத்தின் நேர்த்திக்கு அப்பால் நான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கையை இங்கு நிகழுகிற பெருந்துயரங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற கவனம் இருக்கிறது. இங்கு மிகத்துயரமான வாழ்க்கை நடந்துகொண்டிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

விடுதலைப் புலிகள் எல்லா இயக்கங்களையும் வெட்டி சாய்த்து தங்களை நிறுத்த முற்பட்டார்கள். அவர்களது பிழைத்த செயற்பாடுகளால் தமிழ்மக்கள் இன்று சூன்யமான அரசியல் இருள்வெளியில் கதியற்று நிற்கிறார்கள். கடைசிச்சமரில் இதுவரை எண்ணிக்கை அறியப்படாத பெருந்தொகை மக்கள் பலியாகியுள்ளனர். யுத்தம் முடிந்துவிட்டது. ஆனால் யுத்தத்தில் சிக்கி தவித்த மக்கள் இன்னும் அதன் வடுவில், அதன் நீட்சியில் மாட்டுண்டு தவிக்கிறார்கள். இலங்கை அரசாங்கம் நாளும் பொழுதும் வெற்றிகளை கொண்டாடிக்கொண்டிருக்கிறது. மீளமீள தோல்வியையும் வீழ்ச்சியையும் கொண்டாடி, முடிந்த யுத்தத்தை ஞாபகப்படுத்தி எங்கள் எல்லோரையும் துயரத்திற்குள்ளாக்கிறது.

இப்பொழுது எங்களுக்கேற்பட்டிருக்கிற கதி அதுதான். புலிகளது தோல்வியை தமிழர்களின் தோல்வியாகவும் அவர்களின் கனவின் தோல்வியாகவும் மகிந்தராஜபக்ஷவினால் சிங்ளவருக்கு வழங்கப்படுகிறது. புலிகளுக்கும் படையினருக்குமான சமர்கள் ஓய்ந்த போதும் இங்கு ஏதோ ஒரு சமர் நிகழ்ந்தபடிதானிருக்கிறது. யாழ்ப்பாணத்திலும் சோதனைக் கெடுபிடிகள் சந்தேகங்கள் இன்னும் அதிகரிக்கிறது. மிகவும் கஸ்டமாக இருக்கிறது. தப்பிவந்த புலிகளாக எல்லாரும் பார்க்கப்படுகிறார்கள். புலிகளது நடத்தைகளில் எங்கள் பலருக்கு விமர்சனம் இருந்தபோதும் சிங்கள உலகம் புலிகளின் வீழ்ச்சியை தலைதூக்க முடியாத தமிழர்களின் நிலையாக கருதுகிறது. வீழ்ச்சியின் பிறகான அடக்குமுறைகளையும் மெல்ல நிகழ்த்தத்தொடங்கிவிட்டது.

நானும் இந்த நாட்டை விட்டு வெளியேறிவிடலாம் என நினைக்கிறன். அம்மாவும் தங்கச்சியும் கடைசிச்சமரில்தான் உயிர் தப்பி வவுனியா வந்து சேர்ந்தார்கள். வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு விடுதலைப் புலிகள் 14வயதான எனது தங்கச்சியை பிடித்துச்சென்று கட்டாயமாக தங்கள் அமைப்பில் சேர்த்து களத்தில் விட்டார்கள். அவளது முடியை முழுமையாக வெட்டி விட்டார்கள். அவள் தப்பி வந்திருக்கிறாள். மொட்டைத்தலையாக இருப்பதால் கவலைப்படுவதாக அம்மா சொன்னார். இப்பொழுது அவர்கள் எனக்கு உயிருடன் கிடைத்திருப்பது பெரிய ஆறுதலைத் தருகிறது.

நீங்கள் நாடு திரும்பலாம் அதற்கொரு காலம் வரும் என்று காத்திருந்திருப்பீர்கள். ஆனால் இங்கிருந்து வெளியேறிவிடுகிற சூழ்நிலைதான் மேலும் தொடருகிறது. நீங்கள் எல்லா சூழ்நிலைகளையும் நெருக்கடிகளையும் அறிவீர்கள் என நினைக்கிறேன். தினமும் துவக்கால் அச்சுறுத்தப்படுகிற என்னால் ஓர் இரவில் வெளியில் ஒரு வீட்டில் தங்கியிருப்பதை நினைத்துப்பார்கக முடியவில்லை. வீதிகளில் பயமும் மரணமும் பின்தொடருவதைப்போல இருக்கின்றன. ஆனால் பலர் இங்கு மௌனிகளாக இருக்கிறார்கள். இங்கிருக்கிற நமது சில படைப்பாளிகளே என்னை சந்திக்க விரும்ப மாட்டார்கள். இந்த அரசியற் சூழல் என்னை எனது சமூகத்தலிருந்து தேசத்திலிருந்து அந்நியமாக்கிறது.

மரணம் காத்திருக்கிற ஓர் உயிராக என்னை விட்டிருக்கிறது எனலாம். சொற்களாலும் கனவினாலும் இப்படி துயரம் விளைந்து விட்டது. “எல்லாம் கைவிட்டு ஒழுங்காக இருந்தால் வாழலாம்” என்ற தீர்வை என்னால் பின்தொடர முடியவில்லை. அதற்கிடையிலான போராட்டமாக நாட்கள் போகின்றன. இவை எதையும் அம்மாவிடம் சொல்லவில்லை. அவருக்கு இப்படியொரு நிலையை அறிவது மேலும் துயரத்தை வழங்கிவிடும். அம்மாவையும் தங்கச்சியையும் சேருகிற பார்க்கிற நாட்களுக்காக காத்திருக்கிறேன்.

ஒரு குருட்டுத்தனமான பயங்கர வெளியில் இந்த சனங்கள் வாழுகின்றனர். ஈழம் பற்றிய கனவு எனக்கு என்றைக்கும் இருக்கும். புலிகளின் தோல்வி அந்தக் கனவை குலைத்துவிடவில்லை. அதற்கான சாத்தியங்கள் எதுவும் இங்கு இல்லாமலிருக்கிறது. இப்பொழுது இராணுவத்தின் அணுகுமுறைகளும் பார்வைகளும் அதிகாரங்களும் இருந்ததைவிட அதிகரித்து வருகின்றன. இவற்றிற்கு இடையில் எதிர்ப்பும் கசப்பும் காட்டிக்கொடுப்பும் நிகழ அச்சம் தருகிற பொழுதுகளாக வாழ்வு கழிகின்றன. விடுதலைப் புலிகள் தங்களை விமாசனத்திற்கும் மனிதநேயத்திற்கும் உட்படுத்தியிருந்தால் எங்களால் வாழக்கூடிய சூழ்நிலை தோன்றியிருக்கும்.

என்றைக்கும் தாங்க முடியாத பிரிவாகவும் இழப்பாகவும் கிளிநொச்சியின் வீழ்ச்சி நிகழ்ந்தேறிவிட்டது. கிளிநொச்சியில் மிகவும் பிரியம் கொண்டு வாழ்ந்திருந்தேன். இரவுகளில் அதன் தெருக்களை இரசித்தபடி சைக்கிளில் செல்லுகிற ஞாபகங்கள் மீள வரப்போவதில்லை என்கிறபோது மிகத்துக்கமாக இருக்கிறது. உடைய உடைய நாங்கள் கட்டிய சிறிய குடிசை அங்கு தகர்ந்துபோயிருக்கும். இனி அதை எழுப்பி வாழத்தொடங்குவது எப்படி முடியப்போகிறது, அங்கு இனி எப்படியான வாழ்க்கை நடக்கப்போகிறது என்று கேள்விகள் எழுகின்றன. எங்கு அலைவது எங்கு ஒளிவது என்றெல்லாம் தெரியவில்லை.

எப்பொழுதும் சரிந்துவிடலாம் என்ற வாழ்வில் சொற்களை விட்டுச் செல்லுவது பயனுடையதாக இருக்கும் என நினைக்கிறேன். அச்சுறுத்தலுக்குள்ளும் சவாலாக வாழவேண்டும் போலிருக்கிறது. என்னை என்னால் அடக்கவும் மௌனியாக்கவும் முடியவில்லை. துவக்கு என்றைக்கும் வாய் பிளந்தபடியிருந்தபோதும் சொற்களற்று எதிர்ப்பற்று இருக்க முடியவில்லை. இம்முறை வன்னியின் துயரங்களை நான் நேரடியாக அனுபவிக்கவில்லை. அம்மா எப்போதாவது பேசுகிறபோது அந்த வாழ்க்கையின் பெருந்துயர்களை கூறிக்கொண்டிருப்பார். ஆனால் கனவுகள் அந்த யுத்த பூமியில் வாழ்வதாகவே நிகழ்ந்து கொண்டிருந்தன. கொடுங்கனவுகளைக் கண்டு அம்மாவையும் தங்கச்சியையும் நித்தம் பறிகொடுத்து அலைந்து, தூக்கம் கலைந்த பிறகும் அழுதுகொண்டிருப்பேன்.

நாங்கள் இங்கு எங்கள் அடையாளத்திற்காகவும் எங்கள்மீது திணிக்கப்படுகிற அதிகாரத்திற்கு எதிராகவும் எதாவது செய்து கொண்டிருப்போம். நீங்களும் செய்து கொண்டே இருங்கள். இருப்பை வைத்திருப்பது மிக முக்கியமானது. வீதிகள் இன்னும் மூடப்பட்டுத்தானிருக்கிறது. போர் பயிற்சிகள் நடக்கும் சத்தமும் கேட்டபடிதானிருக்கிறது. இராணுவம் அதே உசார் நிலையில் அதே பதற்றத்தில் தெருக்களிலிருந்து மக்களை ஒதுக்குகின்றது. அவர்களிடம் இந்த யுத்தநோய் தீரப்போவதில்லை. துவக்குகள் இங்கு தூங்கும் நாள் ஒன்று வரும் என நினைக்கவில்லை. மறைவாக அழிப்பு நடக்கிறது. பிரபாகரன் இறக்கவில்லை என வாதாடியவர் பிறகு துண்டுதுண்டாக வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தார் என்கிறார்.

என்னுடன் படிக்கிற சில நண்பர்கள் மிக ஆதரவாக ஆறுதலாக கவனமாக பார்த்துக்கொள்ளுகிறார்கள், சேர்ந்திருக்கிறார்கள். நெடுக எனக்கு மின்னஞ்சல் வாயிலாக ஆறுதல் தருகிறவர்களாக ஹரிகரசர்மா, பிரதீபா, தமிழ்நதி, றஞ்சனி போன்றவர்கள் இருக்கிறார்கள். மாதுமை எனக்கான எல்லா செலவுகளையும் செய்து மிகவும் அன்புடன் பார்த்துக்கொள்ளகிறார். பக்கத்தில் இருப்பவர்களைவிட தூரத்திலிருந்து மனதால் நெருங்கியிருக்கிற அந்த நண்பர்களை நெடுக நினைவு கூறுகிறேன்.

எழுதுவதை எந்த சூழ்நிலையிலும் கைவிட்டதில்லை. எழுவதற்கு மனம் சரியில்லை என்றதை ஒருநாளும் உணர்ந்ததில்லை. நெருக்கடியிலும் துயரத்திலும் பேசாமல் எழுதுவதைத்தவிர எதுவும் எனக்கு ஆறுதலாக இருக்கவில்லை. உங்கள் கருத்துக்களின் பதிவை எனக்கு அனுப்பி வையுங்கள். அவை எனக்கு எல்லாவித்திலும் ஆறுதலாகவும் உந்துதலாகவும் இருக்கும். நம்பிக்கை முற்றாய் இழந்துபோயிருக்கிற என்னால் அதே நிலையில் இருக்கிற உங்களுக்கு நம்பிக்கை எதுவும்கூற முடியவில்லை., நம்பிக்கை என்பது எங்களிடம் வெறும் வார்த்தையாகிவிட்டது. உங்களுடன் இந்த சொற்களைப் பகிருவதில் ஆறுதலாக இருப்பதை உணருகிறேன். இந்த நிகழ்வை ஒழுங்கு செய்த நண்பர்களுக்கும் பங்கு கொண்ட நண்பர்களுக்கும் தகவல் தந்த நிவேதாவுக்கும் நன்றிகள்.

மிக்க அன்புடன்
- தீபச்செல்வன்
(deebachelvan@gmail.com)

Tuesday, June 23, 2009

நிலக்கிளி பாலமனோகரனின் ஆளுமைகளும் அனுபவங்களும் - ஒலித்தொகுப்பு




நிலக்கிளி என்ற பிரபல நாவலால் “நிலக்கிளி” பாலமனோகரன் என்று பரவலான கவனத்தைப் பெற்ற இவர் தற்போது டென்மார்க்கில் வசித்து வருகின்றார். அண்மையில் bleeding hearts என்ற அவரது ஆங்கில நாவல் வெளியீட்டை முன்வைத்து கனடா வந்திருந்தபோது “சுடருள் இருள்” நிகழ்வில் கலந்து கொண்டு தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். அதன் ஒலித் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.


கீழ் வரும் ஒலிப் பதிவை முழுமையாகக் கேட்க, “Play full Song" என்ற சுட்டியை அழுத்தவும்



Writer Balamanokaran -

Sunday, June 21, 2009

எழுத்தாளர் தேவகாந்தனின் ஆளுமைகளும் அனுபவங்களும்






பிரபல எழுத்தாளரும், இலக்கிய விமர்சகருமான தேவகாந்தன் ”சுடருள் இருள்” நிகழ்வில் கலந்து கொண்டு “ஆளுமைகளும் அனுபவ்ங்களும் என்ற தலைப்பில் தன் இலக்கிய அனுபவங்களை சுவைபட சொன்னார். அதன் ஒலித் தொகுப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.

அவரது வலைமனை முகவரி
www.devakanthan.blogspot.com


கீழ் வரும் ஒலிப் பதிவை முழுமையாகக் கேட்க, “Play full Song" என்ற சுட்டியை அழுத்தவும்.


Writer Devakanthan -


ராஜமார்த்தாண்டன் நினைவுரையின் ஒலிப்பதிவு

ஒலிப்பதிவு கீழே இணைக்கப்பட்டுள்ளது



Kaalam Selvam On Rajamarthandan -



ராஜமார்த்தாண்டன்

ராஜமார்த்தண்டனுக்கு அஞ்சலி - 'காலம்' செல்வம்

('சுடருள் வாழ்வு' நிகழ்வில் உரையாற்றியதிலிருந்து சில பகுதிகள்...)


கவிதை என்பது மோகனக்கனவு என்பார் புதுமைப்பித்தன். ஆதியில் இருந்து இன்றுவரையான மனிதகுல சிந்தனை வளர்ச்சிக்கு அடிப்படியான கனவு இது. எனவே இந்தப் பிரபஞ்சத்தில் அறியக்கிடைக்கும் எல்லாமும் மனிதனின் எல்லா அனுபவங்களும் இன்றைய கவிதைக்குரிய பாடுபொருளாகின்றன.

இன்றைய கவிதை அனுபவத்தின் சாரத்தை உணர்த்துவது விபரித்தலல்ல. உணர்த்தல் மொழி சார்ந்தகையால் மொழி ஆளுமையில் தீவிர கவனம் கொள்கின்றது.. பழக்கத்தில் உள்ள சொற்களை இன்னும் கூர்மைப்படுத்துகின்றது. நல்ல கவிஞன் மொழியில் இருந்து தனக்கேயான ஒரு கவிதை மொழியை உருவாக்கிக் கொள்கின்றான்.

கவிதை என்றும் புதிதாக இருக்கவேண்டும். கவிஞனின் தனித்துவம் அவனுக்கேயான பார்வை மற்றும் அவனது சிறப்பான மொழியாளுமை என்பவையாகும். எல்லாவற்றிற்கும் மேலான அவனது அபூர்வமான கற்பனையாற்றல் காரணமாக கவிதையில் இந்தப் புதுமை சாத்தியமாகின்றது. நேற்றைய கவிதைகளை நாம் இரசிப்பதற்கும் இந்தப் புதுமையும் கற்பனைத் திறனுமே காரண்மாகின்றன.

ராஜமார்த்தாண்டன் தன் முழுவாழ்க்கையும் தமிழ்க் கவிதைக்காகவும் இலக்கியத்திற்காகவும் ஒப்புக்கொடுத்தவர். ஈழக்கவிதைகள் மீது தீராத காதலும் கரிசனையும் கொண்டவர். ஈழத்தவர்களான அனார், மெலிஞ்சி முத்தன், திருமாவளவன், மைதிலி, வினோதினி போன்ற பல்வேறு படைப்பாளிகளின் கவிதைகளைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர்.

ராஜமார்த்தாண்டன் ஆனி மாதம் 6ம் திகதி காலை பதினொரு மணிக்கு காலச்சுவடு அலுவலகத்திற்கு முன் நடந்த விபத்தொன்றில் காலமானார். 1948ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் சந்தையடிக்கிராமத்தில் பிறந்த இவர் தமிழ்நாட்டில் பட்டப்படிப்பையும், முதுகலை படிப்பை கேரளப் பல்கலைக் கழகத்திலும் முடித்தார். கலாநிதி படிப்பை அங்கேயே தொடர்ந்திருக்கின்றார். 1976-1083 வரை கொல்லிபார்வை என்ற இதழை நடத்தியுள்ளார், 12 இதழ்கள் வெளிவந்திருக்கின்றன.

தமிழகத்தின் பல்வேறு இதழ்களில் ராஜமார்த்தாண்டன் எழுதியிருக்கின்றார். இவரது புதுக்கவிதைத் தொகுதிக்காக 2003ல் தமிழக அரசு வழங்கிய விருதைப் பெற்றிருக்கின்றார். இவரது முக்கிய நூல்கள்
(1) புதுமைப்பித்தனும் கயிற்றிரவும் (2000)
(2) ராஜமார்த்தாண்டன் கவிதைகள் (2000)
(3) புதுக்கவிதை வரலாறு (2003)
(4) கொங்குதேர் வாழ்க்கை (2007)

கொங்குதேர் வாழ்க்கை, 93 கவிஞர்களின் 893 கவிதைகளை உள்ளடக்கியதோடு, தமிழ்க்கவிதை பரப்பின் 70 ஆண்டுகளை பதிவு செய்திருக்கின்றது.

Sunday, June 14, 2009

தீபச்செல்வனின் 'பதுங்குகுழியில் பிறந்த குழந்தை' - தர்ஷன்

‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ என்ற தொகுப்பின் தலைப்பை பார்த்தவுடன் மனதுக்குள் முண்டியடித்துக்கொண்டு வந்து ஒரு உக்கிர படிமம் உண்டாகிறது.

இருந்தவற்றையெல்லாம் இழந்து, இருக்கும் ஒவ்வொரு கணமும் எனது இருப்புக்கு ஆதாரமான ஆன்மாவை இழந்துவிடுவேனோ என்ற அச்சத்துடன் பதுங்கியிருக்கும் தாய்.

புறத்தின் பயங்கரத்தையும், அங்கு இருப்புக்கு இருக்கும் அச்சுறுத்தலையும் அறியாது காலத்தின் உந்துதலில் பிறந்துவிடும் குழந்தை.

பிறப்பு மனித வாழ்வுக்கு நம்பிக்கை தரவேண்டியது? மகிழ்ச்சியைத் தரவேண்டியது? பிஞ்சொன்று பிறந்த செய்தி சொல்லி, உறவினர்களையும் அயலவர்களை வரவழைத்து கொண்டாடப்பட வேண்டியது?

ஆனல், உறவினரும் அயலவரும் வேரோடு தறிக்கப்பட்டு வெளியெங்கும் வீசி எறியப்பட்டிருக்கிறார்கள்.

அவலக்குரலும், அழுகையொலியும், அச்சம் உண்டாக்கிய நீண்ட மௌனமும் நிறைந்திருக்கும் சூழலில், யார் இந்தப் பிஞ்சின் பிறப்பை கொண்டாடுவார்கள்?..

வீரிட்டு அழும் இந்த குழந்தை தனது இருப்பை தெரியப்படுத்துகிறதா?
இல்லை, தன்முன்னால் வாழ்வை இழந்து கிடப்பவர்களுக்காக அழுகிறதா?
அல்லது, ‘வெளியில் உலாவும் மரணப் பிசாசு எக்கணும் தன்னையும் ஆட்கொள்ளலாம்’ என்பதைப் புரிந்துதான் அழுகிறதா?

இப்படி மனித இருப்பின் அர்த்தம் குறித்த அடிப்படைக் கேள்விகளை எழுப்புகிறது இந்த தொகுப்பின் தலைப்பு.

தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஒரு கவிதையின் தலைப்பே தொகுப்பின் தலைப்பாகியிருக்கிறது.

‘ஒரு வேளை எனது குழந்தை
அமெரிக்காவில்
ஒரு மாளிகையில்
பிறந்திருந்தால்
எதை உணர்ந்திருக்கும்?’

என்று கனவுடன் தொடங்கும் கவிதை

‘குழந்தைகளுக்கான
சிறிய சவப்பெட்டிகள்
நிரம்பிக் காணப்படும்
எதுவுமற்ற
நமது நகரத்தில் அல்லவா
பிறந்திருக்கிறது’

என்ற யதார்த்த நிலையைக் காணுகின்றது.

நான் தொகுப்பின் தலைப்பை வாசித்தபோது எனக்குள் எழுந்த மனித இருப்பு குறித்த கேள்விகளை இந்தக் கவிதை ஓரளவு எழுப்புகிறதென்றாலும் அதில் அது முழுமை பெறவில்லை. ‘குழந்தை ஏன் இங்கு, இப்போது பிறந்தது?’ என்ற கேள்வியை கவிதை எழுப்பினாலும் அது மானிட வாழ்வின் இருண்ட பக்கங்களைப் புலப்படுத்தி விசாரணைக்கு உட்படுத்த தவறுகிறது. மேலும், இந்தக் கவிதையில் வரும் இரண்டு வரிகள் முன்னிறுத்த முயலும் கருத்துக்கள் வாசக மனதை உறுத்துகின்றன.

முதலில், கவிதையில் வரும் பலமான வரிகளையும் அவை புலப்படுத்தும் படிமத்தையும் பார்ப்போம்.

‘...
இசையின் நாதம் செத்துவிட
குழந்தைகளின் பாடல்கள்
சாம்பலாகிப் பறகின்றன
..’

தீபச்செல்வனின் இந்த வரிகள் ஈழ விடுதலைப் போராட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் சேரனால் எழுதப்பட்ட ‘சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து எழுந்து வருக’ என்ற வரிகளை நினைவுக்கு இழுத்து வருகின்றன. தீபச்செல்வனின் வரிகளை சேரனின் வரிகளின் தொடர்ச்சியாக பார்க்கும்போது கால நீட்சியில் ஈழத்தில் தொடர்ந்துவரும் மனித பேரவலம் வாசக மனதைப் பல்வேறு கோணங்களில் குத்துகிறது.

அழிவொன்றின் பின், போரட்டத்துக்கு அறைகூவல் விடுத்தன சேரனின் அவ்வரிகள். இந்தக் குரலுக்குச் செவிசாய்த்து பல்வேறு விடுதலை இயக்கங்ளில் பல்லாயிரக் கணக்கான இளைஞர்களும், யுவதிகளும் இணைந்தனர். ‘விடுதலை பெறப்போகின்றோம்’ என்ற கனவுடன் போரடப்போய் ஆண்டுகள் பல கழிந்த பின்னாலும், பல பேரழிவுகளுக்குப் பின்னாலும் விடுதலைக் கனவு கனவாகவே இருக்கிறது. ‘குழந்தைகளின் பாடல்கள்’ இப்போதும் ‘சம்பாலாகிப் பறக்கின்றன’. இந்தப் பேரவலத்தையே தீபச்செல்வன் இப்போது எழுதிய வரிகள் எனக்குப் புலப்படுத்துகின்றன.

இனி, கவிதையில் என்னை உறுத்திய வரிகளைப் பார்ப்போம்.

‘குழந்தைகளின் விழிகளில்
மரணம் நிரந்தரமாக குடிவாழ்கிறது’ எனத்தொடங்கும் கவிதையின் பகுதி

‘…
எதையும் அறியாது கிடக்கும்
எனது குழந்தை
சதாமின் ஆட்சிக்காலத்தில்
ஈராக்கில் பிறந்திருக்கலாம்’ என முடிகிறது.

கவிதையை அமெரிக்க கனவுடன் தொடங்கும் தீபச்செல்வன் ‘சதாமை அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நசுக்கப்படும் மனிதராகப் புலப்படுத்துகிறார்’ என நினைக்கின்றேன். இந்த கருத்துடன் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

ஆனால், ‘சதாமும் அவரது ஆட்சியும் கொடூரமானது என்றாலும் குழந்தை பிறந்த நாட்டின் ஆட்சிக்காரரையும் ஆட்சியையும் விட எவ்வளவோ பரவாயில்லை’ என்ற கருத்தை கவிதை முன்னிறுத்துவதாக எனக்கு படுகிறது.

இந்த கருத்துடன் என்னால் உடன்பட முடியவில்லை. சதாமின் ஆட்சியில் ஈராக்கில் தொகையில் சிறுபான்மையினரான குர்திஷ் மக்களும், பெருபான்மையிரான ஷியா மக்களும் பட்ட துன்பத்தை சொல்லி மாளாது. இரசாயனக் குண்டுகளை தனது நாட்டு மக்களின் மீது ஏவிய கொடிய மனிதர் சதாம். ‘சாதமின் ஆட்சி பரவாயில்லை’ என்ற கருத்து அவரின் ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய வலியை உண்டாக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

ஒவ்வொரு கொடூரத்தின் தாக்கமும் அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். ஒரு கொடூரத்தின் கோரத்தன்மையை காட்டவதற்கு இன்னொரு ‘கொடூரத்தை பரவாயில்லை’ எனக் கூறும் ஒப்பீட்டுவாதம் ஏற்றுகொள்ளக் கூடியதல்ல.

அடுத்து, இதே கவிதையில் வரும் சொல்லொன்றும் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியது.

‘…
அது பிறக்கையில்
எரிந்த தொட்டிலின் தாழத்தில்
தாலாட்டுப் பாடல்கள்
கறுத்திருந்தன என்றும்
நான் கூறவேண்டும்.
…’

இதில் ‘தாலாட்டுப் பாடல்கள் கறுத்திருந்ததாக’ கறுப்பு நிறம் எதிர்மறையாகப் பாவிக்கப்படிருக்கிறது. ‘எரிந்த தொட்டிலின் தாழத்தில்’ தாலாட்டுப் பாடல்கள் கறுத்திருக்க தேவையில்லை. வேறொரு வண்ணத்தையும் பெற்றிருக்கலாம். கறுப்புத்தான் துக்கத்தின் நிறமா?

எமது [தமிழ்] மரண வீடுகளில் ‘வெள்ளையே’ துக்கத்தின் நிறமாக கருதப்பட்டிருக்கிறது, இன்றும் பல இடங்களில் கருதப்படுகின்றது. இது இந்து சமயத்திற்கூடாக வந்ததாக இருக்கலாம்?. இருப்பினும், ‘கறுப்பு நிறம் துக்கத்தை குறிக்கிறது’ என்ற கருத்தாக்கம் எப்படி எமக்கு வந்து சேர்ந்தது என்ற கேள்வியை நாம் எழுப்பவேண்டும். இதை காலனித்துவம் எமது ஆழ்மனதில் விட்டுச்சென்ற எச்சமாகவே நான் பார்க்கின்றேன். கறுப்பு நிறத்துக்கு காலனித்துவம் கொடுத்த அர்த்தத்தையும் அது எப்படி நிற வேற்றுமையை முன்வைத்து மனிதரை அடிமைப்படுத்தியது என்றும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இங்கு ‘கறுப்பின்’ பாவனை குறித்த கேள்வியை நான் எழுப்ப என்னை முந்தள்ளி விட்டது ‘கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் பாடல்கள்’ என்ற கவிதை.

‘தானியங்கள் வீடுகளில் நிரம்பிக்கிடக்கின்றன
வீடுகள் நிரம்பிய கிராமங்களைவிட்டு
நாங்கள்
வெளியேறிக்கொண்டிருக்கிறோம்

துயரத்தின் பாதைகள்
பிரிந்து நீள்கின்றன
எல்லாப் பாதைகளும்
தலையில்
பொதிகளைச் சுமந்திருக்கின்றன’

‘தானியங்கள் வீடுகளில் நிரம்பிக்கிடக்கின்றன’ என்ற நம்பிக்கையூட்டும் வரியுடன் தொடங்கு கவிதையைத் தொடர்ந்து வாசிக்க வாழ்வின் நம்பிக்கை குறைந்து சுமையே மிஞ்சுகிறது.

‘ஒரு துண்டு நிலவுதானே
வானத்தில் எஞ்சியிருக்கிறது
அடர்ந்த மரங்களுக்கிடையில்
காடுகள் வரைந்த வீதிகளில்
நாங்கள் எங்கு போகிறோம்’

காடுகளை ஊடறுத்து மனிதகள் வரைந்த வீதிகளல்ல. மாறாக, காடுகளே வரைந்த வீதிகள். ‘அந்த வீதிகளூடாக எங்கு போகின்றன’ என்று மனிதர்களுக்கு தெரியாது. மனிதருக்கு பழக்கப்படாத, அச்சப்பட வேண்டிய கூறாக காடுகள் புலப்படுத்தப்படுகின்றன.

காடுகள் குறித்து நாம் தற்போது வைத்திருக்கும் கருத்தியல் வேறானது.
காடுகள் மனித வாழ்வுக்கு அத்தியாவசியமானது. அவைகளின் அருமை தெரியாமலே பல காலம் மனிதர் வாழ்ந்துவிட்டனர். அவைகள் இல்லாமல் மனித இருப்பு இவ்வுலகில் சாத்தியப்பட்டிருக்காது.

பூமியின் சூடேற்றத்தால், இப்படியொரு கருத்து நிலையே இன்று உலக்கத்தில் பிரபலியமடைந்திருக்கிறது.

ஆனால், கொடும் போரில் எக்கணமும் உயிர்போகும் என்ற சூழலில் வாழ்ந்த கவிஞரின் கண்களுக்கு பரீட்சையமற்ற காடுகள் அச்சமூட்டுவதாகவே புலப்படுகின்றன.

இந்த முரண்பாடு நாம் வாழும் உலகின் பூகோள அரசியலின் நிலையையே புடம்போட்டுக் காட்டுகிறது.

மேற்கிலிருப்போருக்கும் போரில்லாத பூமியிலும் இருப்போருக்கும் பூமியின் சூடேற்றமே பெரும் பிரச்சனையாக இருக்கிறது. ஆனால், தீபச்செல்வனின் பூமியில் ஒவ்வொரு நாளும் உயிருடன் இருப்பதே பெரும் பிரச்சனையாக இருக்கிறது.

கவிஞரின் பூமியில் வாழும் மனிதர்களின் நிலைமைக்கு பூமியின் சூடேற்றம் பற்றிக் கதைத்துக்கொண்டு, காரியத்திலிறங்காமலிருக்கும் அதிகார சக்திகளே முக்கிய காரணமென்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த சக்திகளுக்கு பூமியின் சூடேற்றம் பற்றியும் பெரிதாகக் கவலையில்லை. கவிஞரின் பூமியில் நடக்கும் மனிதப் பேரவலம் பற்றியும் அக்கறையில்லை, காரணம்:



நாங்கள் கறுப்பு மனிதர்கள்
கறுப்புப் பொதிகளைச் சுமந்தபடி
நிழல் வீடுகளைப் பறிகொடுத்துவிட்டு
சிறுதுண்டு
நிழலுக்காக
எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்


ஆம். அவர்கள் கறுப்பு மனிதர்கள். இதனாலேயே, உலக ஒழுங்கை நிலைநிறுத்த முயலும் சக்திகள் அந்த கறுப்பு மனிதர்களுக்கு ஏற்பட்ட அவலமொன்றைக் கண்டுகொள்ளாமலேயே கடந்து சென்றுவிட்டன.

இங்கே எனக்குக் கிடைத்த படிமமே தீபச்செல்வனின் ‘தாலாட்டுப் பாடல்கள் /கறுத்திருந்தன’ என்ற வரிகளுடன் முரண்பட வைத்தது.


xxx

இத்தொகுப்பில் 32 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இரண்டு கவிதைகளை முன் வைத்தே எனது கருத்துக்கள் அமைந்திருந்தன. ‘யாழ். நகரம்’ என்ற கவிதையும் எனது கவனத்தைப் பெற்ற கவிதைகளில் ஒன்று. அது குறித்தான எனது கருத்துகளை இங்கு உள்ளடக்கலாம் என நினைத்திருந்தேன். நேர அவகாசம் இன்மையால், முடியவில்லை.

மற்றும் தீபச்செல்வனின் தொகுப்பினூடாக ஓடும் ‘சைக்களின்’ படிமம் ‘பாம்பு’ உண்டாக்கிய படிமங்களும் எனது கவனத்தை பெற்றிருந்தன. முடிந்தால் பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவை குறித்து விரிவாக எழுத முனைகின்றேன்.

சுட‌ருள் இருள் நிக‌ழ்வு: சில குறிப்புகள்


புகைப்படங்கள்: இரமணன்

குறிப்புகள்: தீபன்

சுடரில் இருள் என்கின்ற சமூக இலக்கிய நிகழ்வொன்றில் சகலரையும் சந்திப்பதில் நாங்கள் பெரிதும் மகிழ்வடைகிறோம்.


வந்திருந்தவர்கள்

மனிதன் வாழும் சூழலில் மாற்றம் என்பதும் அதனை புரிதல் என்பதும் எல்லாக் காலங்களிலும் தொடச்சிக்குட்பட்டே வருகிறது. அந்த வகையில் நாங்கள் சார்கின்ற சூழலின் ஒரு பகுதியை இலக்கியமாகவும் ரசனையாகவும் எதிர்கொள்ள நண்பர்கள் நாங்கள் முனைந்ததன் விளைவே இன்றைக்கு நாங்கள் சேர்ந்திருக்கின்ற இந்த சுடருள் இருள் என்கின்ற நிகழ்வு. இது உங்களின் ஆதரவுடன் நடைபெறுகின்ற ஒரு தொடர் நிகழ்வாக திட்டமிடப்படுகிறது. இதன் உள்ளார்ந்த தொனி என்பது எமக்கும் ஈழம், இந்திய மற்றும் அனைத்து புலம் பெயர் படைப்புலகத்துக்கும் இடையான தொடர்பாடல் என்பதே. எல்லா தனி மனிதர்களுக்குள்ளும் அவர் சார்ந்த தத்துவங்களும் அரசியல் கோட்பாடுகளும் இருக்குமென்பதை ஏற்றுக்கொள்கின்ற அதே சமயம் எந்த ஒர் இலக்கியக் கோட்பாட்டையோ அரசியலையோ தனித்து முன்வைக்காது அனைவரிதும் குரல்களும் இவ்வாறான ஒரு பொதுவெளியில் ஒலிக்கவே விரும்புகின்றோம்.



ஆளுமைகளும், அனுபவங்களும்: நிலக்கிளி அ. பாலமனோகரன்

நிலக்கிளி அ.பாலமனோகரன் என்று இலக்கியப்பரப்பில் அறியப்படுபவர். இவரது முதல் நாவலான நிலக்கிளி 1973 இல் வீரகேசரியில் தொடராக வெளிவந்தது. மேலும் வட்டம்பூ மற்றும் குமாரபுரம் நாவல்கள் வீரகேசரி பத்திரிகையிலும் பல சிறுகதைகள் சிந்தாமணி மற்றும் வீரகேசரி பத்திரிகையிலும் எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும் வெளியாகி ஈழத் தமிழ் இலக்கியப்பரப்பில் வாசகரின் கவனம் பெரிதும்ஈர்த்தவை இவர் 1984 இல் டென்மார்க் நாட்டுக்கு புலம் பெயர்ந்து அங்கிருந்து ஈழமுரசு பத்திரிகையில் சிறுகதைகள் எழுதினார். இவரின் பத்து சிறுகதைகள் அடங்கிய தொகுப்பொன்று danish மற்றும் தமிழில் வெளியானதோடு Danish தமிழ் அகராதியை தொகுத்ததிலும் முக்கியத்துவம் பெற்றவர். எழுத்தாளராக மட்டுமன்றி ஒவியராகவும் அறியப்படுபவர். தற்போது கனடாவிற்கு வருகைதந்துள்ள இவரின் வட்டம்பூ நாவல் ஆங்கிலத்தில் Bleeding Hearts என்ற பெயரில் அண்மையில் கனடாவில் வெளியாகி தமிழ்நெற் மற்றும் Monsoon சஞ்சிகையால் பாராட்டுப் பெற்றது.



ஆளுமைகளும், அனுபவங்களும்: தேவகாந்தன்

எழுத்திலும் இலக்கியத்திலும் சிறுகதைகள் நாவல்கள் மற்றும் கட்டுரைகள் விமர்சனங்களால் அறியப்படுகின்ற தேவகாந்தனின் படைப்புலகு விசாலமானது. எழுபதுகளில் இருந்து எழுதிவருகின்ற தேவகாந்தன் நெருப்பு மற்றும் இன்னொரு பக்கம் சிறுகதை தொகுப்புகளையும் உயிர்பயணம், விதி கதாகாலம் யுத்தத்தின் முதலாம் அதிகாரம் லங்காபுரம் நிலசமுத்திரம் மற்றும் கனவுச்சிறை ஆகிய நாவல்கள் மூலமும் பேசப்படுபவர். இதில் கனவுச்சிறை நாவல் ஐந்து பாகங்களாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. கடந்தகாலங்களில் வெளிவந்த இலக்கு காலாண்டிதழ் மற்றும் சமகாலத்தில் இங்கிருந்து வெளிவரும் கூர் சஞ்சிகையின் ஆசிரியருமாவார். தாய்வீடு, வைகறை, காலம் சஞ்சிகைகள் மற்றும் பல இணைய மின் இதழ்களிலும் எழுத்து வினை புரியும் இவர் கதாகாலம் என்ற சொந்த தனி வலைபதிவுகளிலும் விரிவாகவும் செறிவாகவும் எழுதிவருபவர்.



நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: தீபன்

தொடரும் அடுத்த நிகழ்வு ஒரு நினைவுக்குறிப்பு: அண்மையில் அகால மரணத்துக்குள்ளாகி அமரத்துவம் அடைந்த கவிதை ஆர்வலர், திறனாய்வாளர் மற்றும் கவிஞர் அமரர் ராஜமார்த்தாண்டனின் நினைவலைகளை குறித்து சிலநிமிடம் பேச திரு. காலம். செல்வத்தை அழைக்கிறோம். காலம் செல்வம் அவர்கள் “கட்டடக் காடுகள்” கவிதை தொகுப்பினூடாகவும் தொடர்ச்சியாக இங்கிருந்து வெளிவரும் காலம் இலக்கிய இதழ் ஊடகவும் “வாழும்தமிழ்” நூற்கண்காட்சியூடாகவும் சகலருக்கும் பரிச்சயமானவர்



வ்ந்திருந்தவர்கள்


'பதுங்குகுழியில் பிறந்த குழந்தை' பற்றி க.நவம்

நவம் அவர்கள் இவர் கவிஞரும் திறனாய்வாளருமாவார் இவரது உள்ளும் புறமும் - இலங்கையில் விருது பெற்ற சிறுகதைத் தொகுப்பாகும் மேலும் கடந்த காலத்தில் வெளிவந்த நான்காம் பரிணாமம் சஞ்சிகையின் ஆசிரியருமாவார்


'பதுங்குகுழியில் பிறந்த குழந்தை' பற்றி தர்சன்

நாடக நடிகராகவும் நெறியாளராகவும் திகழும் தர்ஷன் வைகறை பத்திரிகையில் பத்தி எழுத்தாளராகவும் தன்னைப் பதிவு செய்தவர்.



தீபச்செல்வனின் உரை (வாசிப்பது சுதன்)





(தொடர்ந்து நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் பதிவில் ஏற்றப்படும்)

Thursday, June 11, 2009

சுடருள் இருள்: June 13 (Sat) 3.00 pm



கனடாவில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் சமூக, இலக்கிய நிகழ்வுகளில் எமது பங்களிப்பாக நண்பர்கள் இணைந்து “சுடருள் இருள்” என்கிற இலக்கிய நிகழ்வு ஒன்றை எதிர்வரும் ஜூன் 13ம் திகதி, சனிக்கிழமை மாலை மூன்று மணிக்கு “ஸ்கார்பறோ சிவிக் சென்ரர்” இல் நடாத்த உள்ளோம்.

ஆர்வலர்கள் கலந்து கொள்ளுமாறும், நண்பர்களுக்கு அறியத்தருமாறும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

********************************************************

சுடருள் இருள்


ஆளுமைகளும் அனுபவங்களும்
-'நிலக்கிளி' அ. பாலமனோகரன்
-தேவகாந்தன்


தீபச்செல்வனின் "பதுங்குகுழியில் பிறந்த குழந்தை"
சில‌ ப‌கிர்த‌ல்க‌ள்
-க.நவம்
-தர்சன்
-தீபச்செல்வனின் உரை(சுதன்)


குறுந்திரைப்படம் திரையிடல்

கருத்துக்கள்/சிந்தனைகள்/பரிமாறல்கள்


June 13, 2009 (Saturday) at 3.00 p.m
Scarborough Civic Centre
(150 Borough Drive, Scarborough)



தொடர்புகளுக்கு:
இளங்கோ 416 725 4862 சுதன் 647 829 9350 நிவேதா 647 293 0673 தீபன் 905 599 6375

Tuesday, June 9, 2009