Sunday, June 21, 2009

ராஜமார்த்தண்டனுக்கு அஞ்சலி - 'காலம்' செல்வம்

('சுடருள் வாழ்வு' நிகழ்வில் உரையாற்றியதிலிருந்து சில பகுதிகள்...)


கவிதை என்பது மோகனக்கனவு என்பார் புதுமைப்பித்தன். ஆதியில் இருந்து இன்றுவரையான மனிதகுல சிந்தனை வளர்ச்சிக்கு அடிப்படியான கனவு இது. எனவே இந்தப் பிரபஞ்சத்தில் அறியக்கிடைக்கும் எல்லாமும் மனிதனின் எல்லா அனுபவங்களும் இன்றைய கவிதைக்குரிய பாடுபொருளாகின்றன.

இன்றைய கவிதை அனுபவத்தின் சாரத்தை உணர்த்துவது விபரித்தலல்ல. உணர்த்தல் மொழி சார்ந்தகையால் மொழி ஆளுமையில் தீவிர கவனம் கொள்கின்றது.. பழக்கத்தில் உள்ள சொற்களை இன்னும் கூர்மைப்படுத்துகின்றது. நல்ல கவிஞன் மொழியில் இருந்து தனக்கேயான ஒரு கவிதை மொழியை உருவாக்கிக் கொள்கின்றான்.

கவிதை என்றும் புதிதாக இருக்கவேண்டும். கவிஞனின் தனித்துவம் அவனுக்கேயான பார்வை மற்றும் அவனது சிறப்பான மொழியாளுமை என்பவையாகும். எல்லாவற்றிற்கும் மேலான அவனது அபூர்வமான கற்பனையாற்றல் காரணமாக கவிதையில் இந்தப் புதுமை சாத்தியமாகின்றது. நேற்றைய கவிதைகளை நாம் இரசிப்பதற்கும் இந்தப் புதுமையும் கற்பனைத் திறனுமே காரண்மாகின்றன.

ராஜமார்த்தாண்டன் தன் முழுவாழ்க்கையும் தமிழ்க் கவிதைக்காகவும் இலக்கியத்திற்காகவும் ஒப்புக்கொடுத்தவர். ஈழக்கவிதைகள் மீது தீராத காதலும் கரிசனையும் கொண்டவர். ஈழத்தவர்களான அனார், மெலிஞ்சி முத்தன், திருமாவளவன், மைதிலி, வினோதினி போன்ற பல்வேறு படைப்பாளிகளின் கவிதைகளைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியவர்.

ராஜமார்த்தாண்டன் ஆனி மாதம் 6ம் திகதி காலை பதினொரு மணிக்கு காலச்சுவடு அலுவலகத்திற்கு முன் நடந்த விபத்தொன்றில் காலமானார். 1948ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் சந்தையடிக்கிராமத்தில் பிறந்த இவர் தமிழ்நாட்டில் பட்டப்படிப்பையும், முதுகலை படிப்பை கேரளப் பல்கலைக் கழகத்திலும் முடித்தார். கலாநிதி படிப்பை அங்கேயே தொடர்ந்திருக்கின்றார். 1976-1083 வரை கொல்லிபார்வை என்ற இதழை நடத்தியுள்ளார், 12 இதழ்கள் வெளிவந்திருக்கின்றன.

தமிழகத்தின் பல்வேறு இதழ்களில் ராஜமார்த்தாண்டன் எழுதியிருக்கின்றார். இவரது புதுக்கவிதைத் தொகுதிக்காக 2003ல் தமிழக அரசு வழங்கிய விருதைப் பெற்றிருக்கின்றார். இவரது முக்கிய நூல்கள்
(1) புதுமைப்பித்தனும் கயிற்றிரவும் (2000)
(2) ராஜமார்த்தாண்டன் கவிதைகள் (2000)
(3) புதுக்கவிதை வரலாறு (2003)
(4) கொங்குதேர் வாழ்க்கை (2007)

கொங்குதேர் வாழ்க்கை, 93 கவிஞர்களின் 893 கவிதைகளை உள்ளடக்கியதோடு, தமிழ்க்கவிதை பரப்பின் 70 ஆண்டுகளை பதிவு செய்திருக்கின்றது.

No comments: