Sunday, June 14, 2009

தீபச்செல்வனின் 'பதுங்குகுழியில் பிறந்த குழந்தை' - தர்ஷன்

‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ என்ற தொகுப்பின் தலைப்பை பார்த்தவுடன் மனதுக்குள் முண்டியடித்துக்கொண்டு வந்து ஒரு உக்கிர படிமம் உண்டாகிறது.

இருந்தவற்றையெல்லாம் இழந்து, இருக்கும் ஒவ்வொரு கணமும் எனது இருப்புக்கு ஆதாரமான ஆன்மாவை இழந்துவிடுவேனோ என்ற அச்சத்துடன் பதுங்கியிருக்கும் தாய்.

புறத்தின் பயங்கரத்தையும், அங்கு இருப்புக்கு இருக்கும் அச்சுறுத்தலையும் அறியாது காலத்தின் உந்துதலில் பிறந்துவிடும் குழந்தை.

பிறப்பு மனித வாழ்வுக்கு நம்பிக்கை தரவேண்டியது? மகிழ்ச்சியைத் தரவேண்டியது? பிஞ்சொன்று பிறந்த செய்தி சொல்லி, உறவினர்களையும் அயலவர்களை வரவழைத்து கொண்டாடப்பட வேண்டியது?

ஆனல், உறவினரும் அயலவரும் வேரோடு தறிக்கப்பட்டு வெளியெங்கும் வீசி எறியப்பட்டிருக்கிறார்கள்.

அவலக்குரலும், அழுகையொலியும், அச்சம் உண்டாக்கிய நீண்ட மௌனமும் நிறைந்திருக்கும் சூழலில், யார் இந்தப் பிஞ்சின் பிறப்பை கொண்டாடுவார்கள்?..

வீரிட்டு அழும் இந்த குழந்தை தனது இருப்பை தெரியப்படுத்துகிறதா?
இல்லை, தன்முன்னால் வாழ்வை இழந்து கிடப்பவர்களுக்காக அழுகிறதா?
அல்லது, ‘வெளியில் உலாவும் மரணப் பிசாசு எக்கணும் தன்னையும் ஆட்கொள்ளலாம்’ என்பதைப் புரிந்துதான் அழுகிறதா?

இப்படி மனித இருப்பின் அர்த்தம் குறித்த அடிப்படைக் கேள்விகளை எழுப்புகிறது இந்த தொகுப்பின் தலைப்பு.

தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஒரு கவிதையின் தலைப்பே தொகுப்பின் தலைப்பாகியிருக்கிறது.

‘ஒரு வேளை எனது குழந்தை
அமெரிக்காவில்
ஒரு மாளிகையில்
பிறந்திருந்தால்
எதை உணர்ந்திருக்கும்?’

என்று கனவுடன் தொடங்கும் கவிதை

‘குழந்தைகளுக்கான
சிறிய சவப்பெட்டிகள்
நிரம்பிக் காணப்படும்
எதுவுமற்ற
நமது நகரத்தில் அல்லவா
பிறந்திருக்கிறது’

என்ற யதார்த்த நிலையைக் காணுகின்றது.

நான் தொகுப்பின் தலைப்பை வாசித்தபோது எனக்குள் எழுந்த மனித இருப்பு குறித்த கேள்விகளை இந்தக் கவிதை ஓரளவு எழுப்புகிறதென்றாலும் அதில் அது முழுமை பெறவில்லை. ‘குழந்தை ஏன் இங்கு, இப்போது பிறந்தது?’ என்ற கேள்வியை கவிதை எழுப்பினாலும் அது மானிட வாழ்வின் இருண்ட பக்கங்களைப் புலப்படுத்தி விசாரணைக்கு உட்படுத்த தவறுகிறது. மேலும், இந்தக் கவிதையில் வரும் இரண்டு வரிகள் முன்னிறுத்த முயலும் கருத்துக்கள் வாசக மனதை உறுத்துகின்றன.

முதலில், கவிதையில் வரும் பலமான வரிகளையும் அவை புலப்படுத்தும் படிமத்தையும் பார்ப்போம்.

‘...
இசையின் நாதம் செத்துவிட
குழந்தைகளின் பாடல்கள்
சாம்பலாகிப் பறகின்றன
..’

தீபச்செல்வனின் இந்த வரிகள் ஈழ விடுதலைப் போராட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் சேரனால் எழுதப்பட்ட ‘சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து எழுந்து வருக’ என்ற வரிகளை நினைவுக்கு இழுத்து வருகின்றன. தீபச்செல்வனின் வரிகளை சேரனின் வரிகளின் தொடர்ச்சியாக பார்க்கும்போது கால நீட்சியில் ஈழத்தில் தொடர்ந்துவரும் மனித பேரவலம் வாசக மனதைப் பல்வேறு கோணங்களில் குத்துகிறது.

அழிவொன்றின் பின், போரட்டத்துக்கு அறைகூவல் விடுத்தன சேரனின் அவ்வரிகள். இந்தக் குரலுக்குச் செவிசாய்த்து பல்வேறு விடுதலை இயக்கங்ளில் பல்லாயிரக் கணக்கான இளைஞர்களும், யுவதிகளும் இணைந்தனர். ‘விடுதலை பெறப்போகின்றோம்’ என்ற கனவுடன் போரடப்போய் ஆண்டுகள் பல கழிந்த பின்னாலும், பல பேரழிவுகளுக்குப் பின்னாலும் விடுதலைக் கனவு கனவாகவே இருக்கிறது. ‘குழந்தைகளின் பாடல்கள்’ இப்போதும் ‘சம்பாலாகிப் பறக்கின்றன’. இந்தப் பேரவலத்தையே தீபச்செல்வன் இப்போது எழுதிய வரிகள் எனக்குப் புலப்படுத்துகின்றன.

இனி, கவிதையில் என்னை உறுத்திய வரிகளைப் பார்ப்போம்.

‘குழந்தைகளின் விழிகளில்
மரணம் நிரந்தரமாக குடிவாழ்கிறது’ எனத்தொடங்கும் கவிதையின் பகுதி

‘…
எதையும் அறியாது கிடக்கும்
எனது குழந்தை
சதாமின் ஆட்சிக்காலத்தில்
ஈராக்கில் பிறந்திருக்கலாம்’ என முடிகிறது.

கவிதையை அமெரிக்க கனவுடன் தொடங்கும் தீபச்செல்வன் ‘சதாமை அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நசுக்கப்படும் மனிதராகப் புலப்படுத்துகிறார்’ என நினைக்கின்றேன். இந்த கருத்துடன் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

ஆனால், ‘சதாமும் அவரது ஆட்சியும் கொடூரமானது என்றாலும் குழந்தை பிறந்த நாட்டின் ஆட்சிக்காரரையும் ஆட்சியையும் விட எவ்வளவோ பரவாயில்லை’ என்ற கருத்தை கவிதை முன்னிறுத்துவதாக எனக்கு படுகிறது.

இந்த கருத்துடன் என்னால் உடன்பட முடியவில்லை. சதாமின் ஆட்சியில் ஈராக்கில் தொகையில் சிறுபான்மையினரான குர்திஷ் மக்களும், பெருபான்மையிரான ஷியா மக்களும் பட்ட துன்பத்தை சொல்லி மாளாது. இரசாயனக் குண்டுகளை தனது நாட்டு மக்களின் மீது ஏவிய கொடிய மனிதர் சதாம். ‘சாதமின் ஆட்சி பரவாயில்லை’ என்ற கருத்து அவரின் ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய வலியை உண்டாக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

ஒவ்வொரு கொடூரத்தின் தாக்கமும் அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். ஒரு கொடூரத்தின் கோரத்தன்மையை காட்டவதற்கு இன்னொரு ‘கொடூரத்தை பரவாயில்லை’ எனக் கூறும் ஒப்பீட்டுவாதம் ஏற்றுகொள்ளக் கூடியதல்ல.

அடுத்து, இதே கவிதையில் வரும் சொல்லொன்றும் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டியது.

‘…
அது பிறக்கையில்
எரிந்த தொட்டிலின் தாழத்தில்
தாலாட்டுப் பாடல்கள்
கறுத்திருந்தன என்றும்
நான் கூறவேண்டும்.
…’

இதில் ‘தாலாட்டுப் பாடல்கள் கறுத்திருந்ததாக’ கறுப்பு நிறம் எதிர்மறையாகப் பாவிக்கப்படிருக்கிறது. ‘எரிந்த தொட்டிலின் தாழத்தில்’ தாலாட்டுப் பாடல்கள் கறுத்திருக்க தேவையில்லை. வேறொரு வண்ணத்தையும் பெற்றிருக்கலாம். கறுப்புத்தான் துக்கத்தின் நிறமா?

எமது [தமிழ்] மரண வீடுகளில் ‘வெள்ளையே’ துக்கத்தின் நிறமாக கருதப்பட்டிருக்கிறது, இன்றும் பல இடங்களில் கருதப்படுகின்றது. இது இந்து சமயத்திற்கூடாக வந்ததாக இருக்கலாம்?. இருப்பினும், ‘கறுப்பு நிறம் துக்கத்தை குறிக்கிறது’ என்ற கருத்தாக்கம் எப்படி எமக்கு வந்து சேர்ந்தது என்ற கேள்வியை நாம் எழுப்பவேண்டும். இதை காலனித்துவம் எமது ஆழ்மனதில் விட்டுச்சென்ற எச்சமாகவே நான் பார்க்கின்றேன். கறுப்பு நிறத்துக்கு காலனித்துவம் கொடுத்த அர்த்தத்தையும் அது எப்படி நிற வேற்றுமையை முன்வைத்து மனிதரை அடிமைப்படுத்தியது என்றும் நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

இங்கு ‘கறுப்பின்’ பாவனை குறித்த கேள்வியை நான் எழுப்ப என்னை முந்தள்ளி விட்டது ‘கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் பாடல்கள்’ என்ற கவிதை.

‘தானியங்கள் வீடுகளில் நிரம்பிக்கிடக்கின்றன
வீடுகள் நிரம்பிய கிராமங்களைவிட்டு
நாங்கள்
வெளியேறிக்கொண்டிருக்கிறோம்

துயரத்தின் பாதைகள்
பிரிந்து நீள்கின்றன
எல்லாப் பாதைகளும்
தலையில்
பொதிகளைச் சுமந்திருக்கின்றன’

‘தானியங்கள் வீடுகளில் நிரம்பிக்கிடக்கின்றன’ என்ற நம்பிக்கையூட்டும் வரியுடன் தொடங்கு கவிதையைத் தொடர்ந்து வாசிக்க வாழ்வின் நம்பிக்கை குறைந்து சுமையே மிஞ்சுகிறது.

‘ஒரு துண்டு நிலவுதானே
வானத்தில் எஞ்சியிருக்கிறது
அடர்ந்த மரங்களுக்கிடையில்
காடுகள் வரைந்த வீதிகளில்
நாங்கள் எங்கு போகிறோம்’

காடுகளை ஊடறுத்து மனிதகள் வரைந்த வீதிகளல்ல. மாறாக, காடுகளே வரைந்த வீதிகள். ‘அந்த வீதிகளூடாக எங்கு போகின்றன’ என்று மனிதர்களுக்கு தெரியாது. மனிதருக்கு பழக்கப்படாத, அச்சப்பட வேண்டிய கூறாக காடுகள் புலப்படுத்தப்படுகின்றன.

காடுகள் குறித்து நாம் தற்போது வைத்திருக்கும் கருத்தியல் வேறானது.
காடுகள் மனித வாழ்வுக்கு அத்தியாவசியமானது. அவைகளின் அருமை தெரியாமலே பல காலம் மனிதர் வாழ்ந்துவிட்டனர். அவைகள் இல்லாமல் மனித இருப்பு இவ்வுலகில் சாத்தியப்பட்டிருக்காது.

பூமியின் சூடேற்றத்தால், இப்படியொரு கருத்து நிலையே இன்று உலக்கத்தில் பிரபலியமடைந்திருக்கிறது.

ஆனால், கொடும் போரில் எக்கணமும் உயிர்போகும் என்ற சூழலில் வாழ்ந்த கவிஞரின் கண்களுக்கு பரீட்சையமற்ற காடுகள் அச்சமூட்டுவதாகவே புலப்படுகின்றன.

இந்த முரண்பாடு நாம் வாழும் உலகின் பூகோள அரசியலின் நிலையையே புடம்போட்டுக் காட்டுகிறது.

மேற்கிலிருப்போருக்கும் போரில்லாத பூமியிலும் இருப்போருக்கும் பூமியின் சூடேற்றமே பெரும் பிரச்சனையாக இருக்கிறது. ஆனால், தீபச்செல்வனின் பூமியில் ஒவ்வொரு நாளும் உயிருடன் இருப்பதே பெரும் பிரச்சனையாக இருக்கிறது.

கவிஞரின் பூமியில் வாழும் மனிதர்களின் நிலைமைக்கு பூமியின் சூடேற்றம் பற்றிக் கதைத்துக்கொண்டு, காரியத்திலிறங்காமலிருக்கும் அதிகார சக்திகளே முக்கிய காரணமென்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த சக்திகளுக்கு பூமியின் சூடேற்றம் பற்றியும் பெரிதாகக் கவலையில்லை. கவிஞரின் பூமியில் நடக்கும் மனிதப் பேரவலம் பற்றியும் அக்கறையில்லை, காரணம்:



நாங்கள் கறுப்பு மனிதர்கள்
கறுப்புப் பொதிகளைச் சுமந்தபடி
நிழல் வீடுகளைப் பறிகொடுத்துவிட்டு
சிறுதுண்டு
நிழலுக்காக
எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்


ஆம். அவர்கள் கறுப்பு மனிதர்கள். இதனாலேயே, உலக ஒழுங்கை நிலைநிறுத்த முயலும் சக்திகள் அந்த கறுப்பு மனிதர்களுக்கு ஏற்பட்ட அவலமொன்றைக் கண்டுகொள்ளாமலேயே கடந்து சென்றுவிட்டன.

இங்கே எனக்குக் கிடைத்த படிமமே தீபச்செல்வனின் ‘தாலாட்டுப் பாடல்கள் /கறுத்திருந்தன’ என்ற வரிகளுடன் முரண்பட வைத்தது.


xxx

இத்தொகுப்பில் 32 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. இரண்டு கவிதைகளை முன் வைத்தே எனது கருத்துக்கள் அமைந்திருந்தன. ‘யாழ். நகரம்’ என்ற கவிதையும் எனது கவனத்தைப் பெற்ற கவிதைகளில் ஒன்று. அது குறித்தான எனது கருத்துகளை இங்கு உள்ளடக்கலாம் என நினைத்திருந்தேன். நேர அவகாசம் இன்மையால், முடியவில்லை.

மற்றும் தீபச்செல்வனின் தொகுப்பினூடாக ஓடும் ‘சைக்களின்’ படிமம் ‘பாம்பு’ உண்டாக்கிய படிமங்களும் எனது கவனத்தை பெற்றிருந்தன. முடிந்தால் பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவை குறித்து விரிவாக எழுத முனைகின்றேன்.

No comments: